×

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க ஒன்றிய அரசும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் சாந்தனுக்கு கடந்த ஜனவரி 24ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.30 மணிக்கு சாந்தன் (55) மரணம் அடைந்ததாக டீன் தேரணி ராஜன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இதுபற்றி டீன் அளித்த பேட்டியில், கல்லீரல் பிரச்னைக்காக உள் நோயாளியாக சாந்தன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு எதனால் என்பதை ஆராய தசையை எடுத்து பரிசோதனை செய்ய அவர் மறுத்துவிட்டார். உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் மீண்டு வந்தார். 28ம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் இருதய அடைப்பு ஏற்பட்டது. சிபிஆர் செய்யப்பட்ட நிலையில் காலை 7.50 மணியளவில் உயிரிழந்தார் என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப எந்த ஒரு நடவடிக்கையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. கல்லீரல் தசை எடுத்து பரிசோதனை செய்ய சாந்தன் உடன்படவில்லை என்பது எனக்கு தெரியும். அவர் கடைசியாக தாயாரை பார்க்க எண்ணினார். சட்டரீதியான பணிகளை முடித்து இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சொந்த ஊருக்கு சாந்தனின் உடல் எடுத்துச்செல்லப்படவுள்ளது என்றார். முன்னதாக, சாந்தனின் உடலை பார்க்க மருத்துவமனைக்கு நளினி நேரில் வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

The post ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணம் appeared first on Dinakaran.

Tags : Chandan ,Rajiv Gandhi ,Chennai ,Trichy Central Jail Complex ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி...